அறிவியலை புறக்கணிப்பதைப் போன்றே ஆபத்தானது அதை ஒரு பக்தி மார்க்கமாக்கி வழிபடும் நிலைக்குப் போய்விடுவதும்கூட. கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவியல் காணொளி பிரபலமான LMES இன் பிரேம்நாத் சென்னையில் நடத்திய நிகழ்வில் இதை என்னால் சரியாக உணர முடிந்தது. அந்த அரைநாள் வகுப்பில் ‘முன்வரிசைக்கான சிறப்புக் கட்டண’ வகுப்பில் என் மகன்களுக்காக கலந்துகொண்டேன்.
நிகழ்வு ஆரம்பித்ததிலிருந்தே பரிசுத்த ஆவியை வரவழைக்கும் ஒரு ஜெபக் கூடாரத்துக்குள் நுழைந்த உணர்வை அந்த அரங்கம் ஏற்படுத்தியது. ஜெபக்கூடங்களில் அவ்வப்போது கவன ஈர்ப்புக்காக உச்சரிக்கப்படும் ‘அல்லேலூயா… Prise the Lord’ க்குப் பதிலாக இங்கு கரங்களை உயர்த்தி “ஐ லவ் சயின்ஸ்” என்ற மந்திரம் சில நிமிடங்களுக்கு ஒருமுறை உச்சரிக்கப்பட்டது. ஜெபக்கூடங்களில் பிரசங்கத்தைவிட குறளிவித்தைக்கு தனி ஈர்ப்பு உண்டு. இங்கும் செயல்வழிக் கற்றல் என்ற பெயரில் அறிவியலைப் பின்னுக்குத் தள்ளி குழந்தைகளை ஈர்க்கும் விதத்திலான ‘திடீரென புகைவரும்…. திடீரென வெடிப்பது… நெருப்பு எரிவது… “ போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறளி வித்தைகள் செய்து காட்டப்பட்டன.
எப்படி தான் சின்ன வயசிலேயே நாசாவுக்குப் போனேன் என்று பிரேம்நாத் விவரித்ததும் ஒரு போதகரின் இளவயது ‘தேவ அழைத்தலை’ நினைவூட்டியது. உச்சகட்ட ‘எழுப்புதல்’ ஜெபத்துக்குப் பின்னே ஆண்டவருக்கான காணிக்கை வசூல் நடைபெறுவதைப்போலவே ‘சிலிர்ப்பூட்டும்’ குறளி வித்தைகள் மற்றும் மந்திர உச்சாடனங்களைத் தொடர்ந்து பிரேம்நாத்தின் சிறப்பு வகுப்பில் சேர்வதற்கான ‘சிறப்பு’க் கட்டணத்தை ‘சிறப்பு’ முன்பதிவு செய்ய QR Code திரையில் கட்டப்பட்டது. (எதுவும் வணிகப் பண்டமாகிவிட்ட இன்றைய சந்தைப் பொருளாதார யுகத்தில் இந்த அறிவியல் வியாபார நோக்கத்தில் எனக்கு ஆட்சேபணை எதுவும் இருக்கவில்லை).
இறுதியில் தேவ ஆசீர்வாதத்தை அள்ளி வழங்கும் இறை ஊழியரைப்போலவே பிரேம்நாத்தின் ஊழியர்கள் பீரங்கியில் சாக்லேட்டுகளையும் சில அன்பளிப்புகளையும் கூட்டத்தின் நடுவே வீசியெறிந்தனர்.
நம் நாடு அறிவியல் தொழில்நுட்பத்தில் பின்தங்கியிருப்பது மட்டுமே நமது சாபக்கேடு என்பதுபோன்ற ஒரு பிம்பத்தை பிரேம்நாத் கட்டியெழுப்புகிறார். எங்கோ கேட்ட குரல்போல இருக்கிறதா? ஆம்! ஏவுகணை விஞ்ஞானியின் அதே குரல்தான்! பொக்ரான் குண்டுவெடிப்பின் பின்னிருந்த ‘நம்மவர்’, அணுசக்தி நாயகர், கூடங்குளம் அணுவுலையை ஒரே சுற்று சுற்றிவந்து அதற்கு நற்சான்றிதழ் கொடுத்தவர், வல்லரசுக் கனவையும் அறிவியல் பக்தியையும் குழந்தைகளிடையே விதைத்த ஐயா அப்துல்கலாமின் புன்னைகை பூத்த பேருருவத்தின்முன்னின்று பேசிய பிரேம்நாத் அதே வல்லரசு கனவையே பிரதிபலித்தார்.
சமூகநோக்கற்ற அறிவியல் தொழில்நுட்ப பக்தியும், ராக்கெட்டும், ரோபோட்டிக்சும், சாட்டிலைட்டுகளும் மட்டுமே அறிவியல் என்று நம்பும் பரிதாபத்திற்குரிய மனங்களும் உண்மையில் நம் தேசத்தின் குறிப்பாக இன்றைய முதன்மையான சூழல் – சமூக நெருக்கடிகளின் பின்னணியில் சாபக்கேடுகளே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக